தாயமங்கலம் கோயில் உள்பிரகாரத்தை சுற்றி மண்டபம் கட்ட பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2022 11:05
தாயமங்கலம்: இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் உள்பிரகாரத்தை சுற்றி மண்டபம் கட்டுவதற்கு பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது.இங்கு பங்குனி மாதம் நடைபெறும் பொங்கல் விழாவின் போது தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கலந்துகொண்டு தீச்சட்டி எடுத்தல் கரும்பாலை தொட்டில்,பொங்கல் வைத்தல் ஆடு,கோழிகளை பலியிடுதல் போன்ற ஏராளமான நேர்த்திக் கடன்களை செலுத்தி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் வாரந்தோறும் செவ்வாய்,வெள்ளி ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.இந்நிலையில் கோயில் உள் பிரகாரத்தை சுற்றி மண்டபங்கள் இல்லாமல் வெட்டவெளியாக இருப்பதினால் பக்தர்கள் வெயிலிலும், மழையிலும் நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளதாக பக்தர்கள் மிகுந்த கவலையுடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த பக்தர் பாண்டியன் கூறுகையில்,தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் சன்னதியை ஒட்டி உள்பிரகாரத்தில் மண்டபங்கள் இல்லாததால் திருவிழா மற்றும் வார இறுதி நாட்களில் பக்தர்கள் வரிசையில் நிற்கும் போது வெயிலிலும்,மழையிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது.ஆகவே அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக தாயமங்கலம் கோயில் உள் வளாகத்தில் மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அருப்புக் கோட்டையைச் சேர்ந்த முத்து ராமலிங்கம் கூறுகையில்,தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் உள் வளாகத்தில் மண்டபங்கள் கட்டினால் திருவிழாக் காலங்களிலும், வார இறுதி நாட்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும் போதும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதற்கு வசதியாக இருக்கும்.ஆகவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக மண்டபம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.