சபரிமலையில் 18 படிகளில் தங்க மேற்கூரை : தேவசம்போர்டு தலைவர் தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2022 09:05
சபரிமலை: சபரிமலையில் 18 படிகளுக்கு மேல் தங்க மேற்கூரை அமைக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வக்கீல் அனந்தகோபன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு இடது முன்னணி அரசு இதுவரை 140 கோடி ரூபாய் உதவி செய்துள்ளது.
2022–23 நிதியாண்டு பட்ஜெட்டில் சபரிமலை மாஸ்டர் பிளானுக்காக 30 கோடி ரூபாய் அனமதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை வரும் பக்தர்களுக்காக திருனந்தபுரம் கழக்கூட்டம், செங்கன்னுார், எருமேலி, நிலக்கல், திருச்சூர், எடப்பாள், கல்பற்றா ஆகிய ஏழு இடங்களில் இடைதாவளம் ( இடை தங்குமிடம்) அமைக்க 118 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் தங்க வசதி, அன்னதான மண்டலம், விருந்தினர் மாளிகை, அடுக்கு படுக்கைகள், கழிவறைகள் போன்றவை அமைக்கப்படும். இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தேவசம்போர்டு சொத்துக்களை அரசு எடுக்கவில்லை. தேவசம்போர்டு கட்டிடங்கள் வாடகைக்கு விடும் நிலைமைக்கு மாற்றப்படும்.. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தேவசம்போர்டு நிலங்கள் மீட்கப்படும். வாரணாசியில் உள்ள தேவசம் விருந்தினர் மாளிகை புதுப்பிக்கப்பட்டு பக்தர்களுக்காக திறந்து விடப்படும். இதற்காக அங்குள்ள மலையாளிகளை ஒருங்கிணைத்து கமிட்டி அமைக்கப்படும். சபரிமலையில் 18 படிகளுக்கு மேல் தங்கமுலாம் பூசப்பட்ட மேற்கூரை அமைக்கப்படும். சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கும் மூன்று கட்டிடங்கள் நவீனப்படுத்தப்படும். சபரிமலையில் தற்போதுள்ள ஆன்லைன் முன்பதிவை தவிர்ப்பது தொடர்பாக அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.