மயில்ரங்கம் மாரியம்மன் கோவிலில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பூச்சாட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2022 05:05
வெள்ளகோவில்: வெள்ளகோவிலை அடுத்த மயில்ரங்கம் மாரியம்மன் கோவில் மூன்றாண்டுக்கு ஒருமுறை பூச்சாட்டுதல் விழா நடைபெறும். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மே 3 ம் தேதி செவ்வாய்க்கிழமை சாட்டப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பூச்சாட்டு நடைபெறவில்லை. மாரியம்மன்கோவில் அமராவதி ஆற்றங்கரையில் உள்ளதால் வடகரை, மயில்ரங்கம் சுந்தராடி வலசு, மொட்டக்காளிவலசு பாப்பா வலசு, வேலப்பநாயக்கன் வலசு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளிலிருந்து பெண்கள் கம்பத்துக்கு தண்ணீர் ஊற்ற வந்து செல்வார்கள். தினசரி காலை, மாலை அபிஷேகம் நடைபெறும். நேற்று இரவு கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை 8 மணி அளவில் கொடுமுடி சென்று தீர்த்தம் கொண்டு வந்து மாலை ஆறு மணி அளவில் வடிசோறு மாவிளக்கு பெண்கள் எடுத்து வந்து கோவிலை வலம் வந்து சிறப்பு பூஜை நடைபெறும். நாளை காலை பொங்கல் விழா நடக்கிறது. பொங்கல் பூஜை நடைபெறும். நாளை மறுநாள் காலை அக்னிச்சட்டி எடுத்தல், மாலை அலகு குத்துதல் ,இரவு கம்பம் கலைத்தல், வெள்ளிக்கிழமை காலை அபிஷேகத்துடன் மஞ்சள் நீர் விளையாட்டு உடன் நிகழ்ச்சி நிறைவுறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மயில்ரங்கம் ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்து வருகின்றனர்.