பதிவு செய்த நாள்
19
மே
2022
10:05
சென்னை :கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகளில், உழைத்து ஊதியம், தட்சணை பெறும் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்துவது அதிகார வெறியை காட்டுகிறது, என, தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த, அவரது அறிக்கை: கடந்த வாரம், துக்ளக் இதழ் ஆண்டு விழா நடந்தது. அதில், இதழின் ஆசிரியர் குருமூர்த்தி பேசுகையில், முதல்வரின் ஓசி பஸ் பயணம் தான் திராவிட மாடலா? என, கேள்வி எழுப்பினார். இதற்கு, இம்மாதம் 17ம் தேதி முரசொலி நாளிதழில், தட்சணையில் வாழக்கூடிய கூட்டத்தின் பிரதிநிதியான குருமூர்த்தி, ஓசியை பற்றி பேசலாமா? என்று, அவர் சார்ந்துள்ள பிராமண சமுதாயத்தை இழிவாக பேசியுள்ளது மிகவும் கண்டிக்கத் தக்கது. பிராமணர்கள் உழைப்பால், நேர்மையால், கடவுள் பக்தியால், தேச பக்தியால் உயர்ந்தவர்கள்.தி.மு.க., தலைவர்கள், கடவுள் மறுப்பை பற்றி பேசுவர். அவர்களது குடும்பத்தினர் பரிகார பூஜை, அபிஷேகம் என்று கோவில் கோவிலாக செல்வர். எதற்கெடுத்தாலும் பிராமண சமூகத்தை இழிவு செய்வது இவர்களது வாடிக்கை. இவர்கள் நடத்தும் கம்பெனிகளுக்கு பிராமணர் ஆடிட்டர்; குடும்ப வைத்தியராக பிராமண டாக்டர்கள்; கோர்ட்டில் வாதாட பிராமண வக்கீல் அமர்த்திக் கொள்வது இவர்கள் வழக்கம். சபை நாகரிகம் கருதி, பல கசப்பான உண்மைகளை நாங்கள் கூற விரும்பவில்லை.முரசொலி பத்திரிக்கை தன் இழிவான விமரிசனத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்; வருத்தம் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, பம்மல் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.