மயிலாடுதுறை தருமபுரத்தில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் பழைமை வாய்ந்த ஞானாம்பிகை சமேத ஞானபுரீசுவரர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீகுருஞானசம்பந்தர் குருபூஜை பெருவிழாவையொட்டி 11 நாள்கள் நடத்தப்படும் குருபூஜை விழா கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலாவும், புதன்கிழமை திருக்கல்யாண வைபவமும், திருத்தேரோட்டம் நடைபெற்றன தொடர்ந்த 10ம் திருநாளான இன்று காலை தருமபுரம் ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திரு மடத்தில் இருந்து நாற்காலி (சவாரி) பல்லக்கில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க, தேவாரம் இசைக்க மேல குரு மூர்த்தங்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். தொடர்ந்து குருமகாசன்னிதானம் வன துர்க்கை அம்மன் கோவில் மற்றும் நட்சத்திர தென்னை ஆகியவற்றை வழிபாடு செய்தார். பின்னர் நாற்காலி பல்லக்கில் எழுந்தருளி திரு மடத்தை வந்தடைந்தார். பல்லக்கைச் என்பதற்காக பலரும் போட்டி போட்டுக்கொண்டு முன்வந்தது பார்ப்போரை பரவசப்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் ஆதீன திருமடத்தின் கட்டளைத் தம்பிரான்கள், தருமபுரம் ஆதின கோவில்களில் தலைமை கண்காணிப்பாளர் மணி, ஆதீன கல்லூரியின் முதல்வர் சுவாமிநாதன், ஆடிட்டர் குரு சம்பத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பூஜைகளை மகேஷ் குருக்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்தனர். அதனை அடுத்து சொக்கநாதர் வழிபாடு, ஸ்ரீசபாநாயகர் தீர்த்தம் கொடுத்தல் மற்றும் பஞ்சமூர்த்திகள் ரிஷபாரூடாய் எழுந்தருளிக் காவிரியில் தீர்த்தவாரி ஆகியவை நடைபெறுகின்றன. மாலை மீண்டும் திருமடத்திலிருந்து நாற்காலி பல்லக்கில் எழுந்தருளி வடக்கு குரு மூர்த்தங்களில் வழிபாடு செய்கிறார். 11-ஆம் நாளான நாளை 22ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பல்லக்கில் அமர்ந்து வீதி உலா வரும் பிரசித்திப்பெற்ற பட்டினப்பிரவேசமும், அதைத் தொடர்ந்து ஞான கொலுக்காட்சியும் நடைபெறவுள்ளது.