காஞ்சி வரதர் பிரம்மோற்சவம் வெட்டிவேர் சப்பரம் வீதிவுலாவுடன் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2022 09:05
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவத்தில் நேற்று இரவு பெருமாள் வெட்டிவேர் சப்பரம் வீதிவுலாவுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை, மாலையில் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் வீதிவுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
உற்சவத்தின் மூன்றாம் நாள் கருடசேவை விழா விமரிசையாக நடைபெற்றது. ஏழாம் நாள் 19ம் தேதி தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. நேற்று முன்தினம் காலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.நேற்று திருவிழா நிறைவு நாளில் மதியம் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு திருமஞ்சனம் நடைபெற்ற பின், வேத பிரபந்த சாற்றுமுறை நடந்தது. இரவு 7:00 மணிக்கு பெருமாள் வெட்டிவேர் சப்பரத்தில் வீதிவுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9:30 மணிக்கு சுவாமி கோவிலை சென்றடைந்ததும் கொடி இறக்கப்பட்டு, 10 நாட்கள் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.