பதிவு செய்த நாள்
25
மே
2022
08:05
திருச்சி: திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், மேலன்பில் கிராமத்தில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் இன்று (25ம் தேதி) சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி, லால்குடி, சுந்தரராஜ பெருமாள் கோவில்108 வைணவ திருத்தலங்களில் 4வது ஸ்தலமாகும். இங்கு ஆண்டுதோறும், வைகாசி விசாகத்தில் இங்குதேரோட்டம் வெகு சிறப்பாக நடந்துள்ளது. ஆனால், பல நூறு ஆண்டுகளை கடந்த நிலையில், ஏதோ ஒரு காரணத்திற்காக திருத்தேர் நிறுத்தப்பட்டு, தேர் நிலையில் நின்றபடியே செல்லரித்தும் போய்விட்டது. இதனால் அன்பில் கிராம மக்கள் ஒன்று திரண்டு, 45 லட்ச ரூபாய் செலவில் புதிய தேர் ஒன்றை உருவாக்கினர். கோயிலில் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் புதிதாக செய்யப்பட்ட திருத்தேரின் வெள்ளோட்டம் இன்று (25ம் தேதி) சிறப்பாக நடைபெற்றது. திருத்தேரின் வெள்ளோட்டத்தினை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று (25ம் தேதி) திருத்தேரின் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள், அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, தக்கார் செல்வராஜ், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்துள்ளனர். இக்கோவிலில் வரும் 4ம் தேதி முதல் 14ம் தேதி வரை பிரம்மோத்சவம் நடைபெற உள்ளது. இந்த பிரம்மோத்சவ விழாவில் 12ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.