பதிவு செய்த நாள்
26
மே
2022
08:05
ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக, தொடர்ச்சியாக, நடராஜர் நடனம் குறித்து இழிவாக பேசி, சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு வரும் ஆசாமியை கைது செய்ய வேண்டும் என, போராட்டம் வலுத்து வருகிறது. சிதம்பரம் தில்லை நடராஜர் நடனம் குறித்தும், அவரது அசைவுகள் குறித்தும் மிகவும் கீழ்த்தரமாக பேசி, ஆசாமி ஒருவர், சமூக வலைதளத்தில், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.மைனர் விஜய் எனப்படும் நபர், யு 2 புரூட்டஸ் என்ற பெயரில், யு டியூப் சேனல் நடத்துகிறார். இதில் தான், நடராஜர் குறித்தும், அவரது நடனம் குறித்தும் கேவலமாக பேசி வீடியோ வெளியிட்டு உள்ளார்.இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஹிந்து அமைப்பினர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம், டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்து களைத்துப் போய்விட்டனர்.
ஆனால், புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார், மைனர் விஜயின் செயலை ஊக்கப்படுத்தும் விதமாக நடந்து கொள்கின்றனர்.இரு தினங்களுக்கு முன், இந்த ஆசாமி, சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் பிரச்னைகள் குறித்து, வீடியோ வெளியிட்டார். அதில், நடராஜர் ஏன் காலை துாக்கி வைத்திருக்கிறார் என்பதற்கு விளக்கம் அளிப்பது போல, தன் விஷமத்தனத்தை கக்கி உள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில், ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், போலீசார் செவி சாய்ப்பதாக இல்லை.இந்நிலையில், சிதம்பரத்தில், சிவனடியார்கள், 5, 000க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நடனமாடி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதற்கு, திருக்கழுக்குன்றம் திருவாசக சுவாமி சிவதாமோதரன் தலைமை வகித்தார். திருவாரூர் உலக ஆன்மிக சங்கமம் நடராஜ சுவாமிகள், சென்னை திருமடம் பாதவூர் அடிகளார். உ.பி., மாநிலம், காசியாபாத்தில் இருந்து நாராயணன்ஜி, ஹிந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.சிவனடியார்கள் கூறுகையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், ஹிந்துக்களை புண்படுத்தும் போக்கு நீடித்து வருகிறது. நடராஜர் நடனம் குறித்து இழிவுபடுத்தி இருப்பது பெரும் கண்டனத்திற்குரியது. இந்த அநாகரீகச் செயலை அரசு வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது. மைனர் விஜய்க்கு பின்னணியில் மத மாற்ற கும்பல் இருக்கலாம் என, சந்தேகம் எழுகிறது என்றனர் - நமது நிருபர் -