பதிவு செய்த நாள்
07
ஜூன்
2022
08:06
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நத்தக்கரை கிராமத்தில் 300 ஆண்டு பழமை வாய்ந்த நல்லசேவன் கோவில் உள்ளது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இக்கோவில் திருவிழா, கடந்த 3ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
7 நாள் நடக்கும் இவ்விழாவை, சேலம் மாவட்டம், நத்தக்கரை, பெரியேரி, நாமக்கல் மாவட்டம், ஆயில்பட்டி, பெரம்பலுார் மாவட்டம், வாலிகண்டபுரம், விழுப்புரம் மாவட்டம், தென்பொன்பரப்பி, மட்டியக்குறிச்சி ஆகிய கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, நடத்துவது வழக்கம். இவ்விழாவில், திருமணமான கிராம பெண்கள், நகை எதுவும் அணியாமல், வெள்ளை நிற ஆடை அணிந்து, விதவை கோலத்தில் பொங்கல் வைத்து வழிபடும், வினோத பழக்கத்தை பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகின்றனர்.
பொங்கல் விழாவில் திருமணமான புகுந்த வீட்டு பெண்களே கலந்து கொள்ள வேண்டும். இந்த வித்தியாசமான பொங்கல் விழா, சூரிய உதயத்துக்கு முன் நடத்துவதையும், கிராம மக்கள் பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகின்றனர். நத்தக்கரை கிராமத்தில், பொங்கல் கூடையுடன் நேற்று நள்ளிரவு 11:30 ஊர்வலமாக வந்தனர். பின், கோவில் வளாகத்தில் விடிய, விடிய பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். 500க்கும் மேற்பட்ட திருமணமான பெண்கள், பூஜை பொருட்கள் அடங்கிய பொங்கல் கூடையுடன் கோவிலுக்கு வந்தனர். பின், அணிகலன்கள், பூச்சூடாமல் விதவை கோலம் பூண்டு, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அதிகாலையில், போலீஸ் சீருடையில் வந்த பூஜாரி, 200க்கும் மேற்பட்ட கிடா, சேவல், கோழிகளை பலி பூஜை செய்தனர்.