திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இன்று விசாக திருவிழாவை முன்னிட்டு கோயிலில் அதிகாலை ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானை, மூலவர் கரத்தில் உள்ள தங்க வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு சுவாமி விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினார். சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு தொடர்ந்து அபிஷேகம் செய்யப்பட்டது. உற்சவ மூர்த்திகளான சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனை தரிசனம் செய்தனர்.