வைகாசி விசாகம் : கம்பம் வேலப்பர் கோயிலில் மகா அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2022 12:06
கம்பம்: கம்பம் வேலப்பர் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை முதல் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் திரளாக வந்து முருகனை தரிசித்தனர்.
முருகப் பெருமான் அவதரித்த நாளாகும். முருகப்பெருமானின் ஆறாவது முகமாக அதோமுகம் தோன்றிய நாளாகும். இந்த நாள் முருகப் பெருமானுக்கு பிடித்த நாளாக கருதப்படுகிறது - எனவே முருகன் கோயில்களில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படும். கம்பம் வேலப்பர் கோயிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், விபூதி, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பலவகை அபிஷேகங்கள் நடைபெற்று இறுதியாக மகா அபிஷேகம் நடைபெற்றது, நூற்றுக்கணக்கில் பக்தர்கள் திரண்டு வந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்றனர். மகா அபிஷேகம் நடைபெற்றபோது அரோகரா கோஷம் விண்ணைத் தொட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோயில் வளாகம் வண்ண விளக்குகளால் ஜொலித்தது. அர்ச்சர்கள் விஜயகுமார், ரவிச்சந்திரன் ஆகிேயார் அபிஷேக ஆராதனைகளை செய்தனர். கம்பராயப்பெருமாள் கோயிலில் முருகன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் விசாக சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர். சண்முகநாதர் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகப்பெருமான் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். ராயப்பன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் சண்முகநாதரை தரிசித்தனர்.