மக்கள் வெள்ளத்தில் பவனி வந்த சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் தேர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2022 10:06
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாக தேர் மக்கள் வெள்ளத்தில் பவனி வந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயில் வைகாசி விசாக திருவிழா ஜூன் 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்துநாள் மண்டகப்படியாக தினமும் சுவாமி புறப்பாடு நடந்தது. 6ம் திருவிழாவன்று சமணர்களைக் கழுவேற்றிய நிகழ்வை நினைவு கூறும் வகையில் கழுவன் திருவிழா நடந்தது. 9ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 9:00 மணிக்கு பூரணை புஷ்கலை தேவியருடன் சேவுகப்பெருமாள் ஐயனார் திருத்தேரில் எழுந்தருளினார். ஆண் பக்தர்கள் தேரில் ஏறி சாமியை வழிபட்டனர். மாலை 4:00 மணிக்கு சந்திவீரன் கூடத்திலிருந்து சிங்கம்புணரி நாட்டார்கள் ஊர்வலமாக வந்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். 4:15 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் புறப்பட்டது. 4:50 மணிக்கு பாரம்பரிய முறைப்படி கழுவன் கழுவச்சி சிலைகள் மீது தேர் ஏற்றப்பட்டது. மாலை 5:15 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. அப்போது சுற்றியிருந்த பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக தேங்காய்களை தேரடிப்படியில் சரமாரியாக வீசி எறிந்து உடைத்தனர். உடைந்த தேங்காய்களை பலர் பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணிந்து கொண்டு சேகரித்தனர். மாலை 6:00 மணிக்கு நேரடி பூஜை நடத்தப்பட்டது. தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் அன்னதானம், நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்திருந்தனர். மாவட்ட எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடந்ததால் ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். தேரோட்டம் நடந்துகொண்டிருந்தபோது காரைக்குடி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வாகனங்களை ஒழுங்குபடுத்தாமல் விட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்து தேரோட்டத்திற்கு இடையூறு ஏற்பட்டது. வாகனங்களை திருப்பி அனுப்பிய பிறகு அவ்வழியாக தேரோட்டம் நடந்தது. 10 ம் திருவிழாவான இன்று பூப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது.