நெல்லையப்பர் கோயிலில் சந்தனாதி தைலம் தயாரிப்பு துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2022 10:06
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சுவாமி அபிஷேகத்திற்கு பல ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சந்தனாதி தைலம் காய்ச்சும் பணி துவங்கியது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் மூலவர் சுவாமி வேணுவன நாதர் சுயம்புலிங்கம் ஆவார். லிங்கத்தின் மீது கோடாரி வெட்டிய காயம் உள்ளதால் அவரது அபிஷேகத்திற்கு சந்தனாதி தைலம் மட்டுமே பயன்படுத்தப்படுவது வழக்கம். சந்தனாதி தைலம் கோயிலில் காய்ச்சுவது நீண்டகால மரபு. சமீபகாலமாக தைலத்தை வெளியே கூட்டுறவு நிறுவனங்களில் வாங்கி பயன்படுத்தினர். ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த ஆண்டு ஆய்வு மேற்கொண்டபோது சந்தனாதி தைலம் கோயில் வளாகத்தில் தயாரிக்கப்பட வேண்டும் என்றார். அதன்படி தைலம் காய்ச்சும் பணி நேற்று கோயில் வளாகத்தில் ஆறுமுகநயினார் சன்னதி அருகே மேற்கொள்ளப்பட்டது. 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட செம்பு பாத்திரத்தில் 44 மூலிகைகள் மற்றும் இதர பொருட்கள் கொண்டு காய்ச்சும் பணி துவங்கியது. தைலம் தயாராக 8 மாத காலம் ஆகும்.கோயில் உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் அய்யர் சிவமணி, கண்காணிப்பாளர் சுப்புலட்சுமி மற்றும் கோவில் பணியாளர்கள் இதனை மேற்கொண்டனர்.