செந்துறை பெரியூர்பட்டியில் மாடு மாலை தாண்டும் வினோத விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2022 05:06
செந்துறை: நத்தம் அருகே செந்துறை பெரியூர்பட்டி மந்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாடு மாலை தாண்டும் வினோத விழா நடந்தது.
விழாவையொட்டி கடந்த மே 5 சாமி சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் திருச்சி,மதுரை, கள்ளிமந்தயம், வடமதுரை, அய்யலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து எருதுகளுடன் வந்த ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்களை சந்தனம் பூசியும், மாலை அணிவித்தும் வரவேற்றனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து 1000க்கும் மேற்பட்ட ராஜகம்பளத்து நாயக்கர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று காலை எருது சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. மாலை விழாவின் முக்கிய நிகழ்வாக மாடு மாலை தாண்டும் விழா நடந்தது. இதில் 10 மந்தைகளை சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர்கள் பாரம்பரிய முறைப்படி சட்டை அணியாமல் தலையில் வெள்ளைத் தலைப்பாகை கட்டி, உடல் முழுவதும் சந்தனம் பூசி, கையில் தடியுடன் வந்தனர். இவர்களை ஊரார் சார்பில் ஒவ்வொரு மந்தையை சேர்ந்தவர்களை அழைத்து மேளதாளம் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து, அந்த கிராமத்து பெண்கள் சிலர் மேலாடை அணியாமல் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளுடன் ஓடிவந்து மாலை தாண்டினார். இதில் முதலில் மாலை தாண்டிய மாட்டின் உரிமையாளருக்கு ஊரார் சார்பாக மரியாதை செய்யப்பட்டது. இவ்விழாவை எல்.ராஜ்குமார் மந்தை நாயக்கர் தலைமையில் நடந்தது. இந்த வினோத விழாவை சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடந்தது.