ஆத்துார்: ‘‘ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில் நாளை கால பைரவருக்கு நடக்கும் நள்ளிரவு பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும்,’’ என, கோவில் செயல் அலுவலர் கவிதா தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, ஆறகளூரில் உள்ள காமநாதீஸ்வரர் கோவிலில், ஸ்ரீகால பைரவர் உள்பட எட்டு பைரவர் சிலைகள் உள்ளன. இங்கு, மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்து வருகிறது. கடந்த, ஏப்., 23ம் தேதி தேய்பிறை அஷ்டமி நாளில், இரவு, 10:00 மணியளவில், காமநாதீஸ்வரர், பெரியநாயகி அம்மன் மற்றும் பைரவர் சன்னதி நடை சாற்றப்பட்டு, வெளி பிரகாரத்தில் உள்ள உற்சவர் பைரவருக்கு, நள்ளிரவு, 12:00 மணியளவில், மகா தீபாரதனை நடந்தது. கால பைரவருக்கு, நள்ளிரவில் பூஜை மற்றும் பக்தர்கள் அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் கவிதா, வெளியிட்டுள்ள அறிக்கை: ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெறுவது வழக்கத்தில் உள்ளது. நாளை ஆகம விதிகளின்படி தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெறும். நள்ளிரவு, 12:00 மணி பூஜைக்கு, பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.