திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூன் 2022 11:06
குலசேகரம் : திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பழமையான கோயில்களில் முக்கியமாக கோயிலான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் ஜூலை மாதம் 6ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி மூலவர் சிலை புதுப்பிக்கும் பணி, மீயூரல் ஓவியங்கள் சீரமைக்கும் பணி, மட ப்பள்ளி சீரமைப்பு ஆகியன நடந்து வருகிறது. கோவில் பிரகாரத்தில் மின் விளக்குகள் பொருத்தும் பணி முடிவடைந்து விட்டது. பிரகாரங்களில் வர்ணம் பூசும்பணி நடந்து வருகிறது. கோவில் கருவறையின் மேல்பகுதி விமானம் சுத்தப்படுத்தி அதன் மீது அஷ்டபந்தன காவி பூசும் பணி நேற்று துவங்கி நடந்து வருகிறது. சுற்றுப்புற சுவர் காவி மற்றும் வெள்ளை வ ர்ணம் பூசப்பட்டு வருகிறது. கோவில் உள் பகுதி மற்றும் வெளிப்பகுதியில் கும்பாபிஷேகத்தை யொட்டி விளக்குகள் பொருத்தப்பட்டு நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. கோவிலின் கிழக்கு வாசலையொட்டிய பகுதியில் பந்தல் அமைப்பதற்காக பிரமாண்ட தூண்கள் நிறுவும் வேலை நேற்று துவங்கியது. மேலும் கிழக்கு வாசலையொட்டி இடையூறாக இருந்த பழமையான கட்டிடம் இடித்து மாற்றப்பட்டது. வரும் ஜூன் 29ம் தேதி முதல் கும்பாபிஷேக பூஜைகள் ஆரம்பமாகிறது. ஜூன் 30ம் தேதி பாலாலயத்தில் பூஜையில் இருக்கும் அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் கருவறைக்கு ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் எடுத்துச்செல்லப்படுகிறது. தொடர்ந்து அங்கு பூஜைகள் நடைபெறும். ஜூலை மாதம் 5ம் தேதி வரை பல்வேறு பூஜைகள் நடைபெறும். ஜூலை மாதம் 6ம் தேதி காலை 5.10 முதல் 5.50 மணி வரை ஜீவகலச அபிஷேகம், காலை 6.00 மணி முதல் 6.50க்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெறும். மேலும் குலசேகரப்பெருமாள் கோவில், திருவம்பாடி கிருஷ்ணசாமி சன்னதி, தர்மசாஸ்தா சன்னதியிலும் கும்பாபிஷேகம் நடைபெறும். ஜூலை 9ம் தேதி தங்கக்கொடிமர பிரதிஷ்டை நடைபெறும்.