பதிவு செய்த நாள்
25
ஜூன்
2022
11:06
செய்யூர்:நாங்களத்துார் கிராம நொண்டிமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம், வெகு விமரிசையாக நடந்தது.
மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக, இஸ்லாம் சமூகத்தை சேர்ந்தவர் பங்கேற்றார். செய்யூர் அருகே, நாங்களத்துார் கிராமத்தில் நொண்டிமாரியம்மன் கோவில் உள்ளது. புதிதாக கட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்த கிராமத்தினர், மூன்று ஆண்டுகளாக கோவிலில் திருப்பணி மேற்கொண்டனர்.தர்மகர்த்தா ஹேமாவதி தலைமையில், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய கோவில் கட்டப்பட்டது.
திருப்பணி முடிந்ததையடுத்து, கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று காலை 10:10 மணிக்கு, கோவில் கோபுர விமானத்திற்கும், 10:20 மணிக்கு மூலவருக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்ட நொண்டிமாரியம்மனுக்கு, தீப ஆராதனை காட்டப்பட்டது.
நாங்களத்துார் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து, சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.குறிப்பாக, கும்பாபிஷேகத்தில் மதநல்லிணக்கத்தை போற்றும்விதமாக, அதே பகுதியைச் சேர்ந்த இஸ்லாம் சமூகத்தை சார்ந்த பிர்தவுஷ்ச லாவுதீன் பங்கேற்றார். அவருக்கு, விழா குழுவினர் சார்பாக, கும்பாபிஷேக புனித நீர் கலசம் வழங்கப்பட்டது.