பதிவு செய்த நாள்
25
ஜூன்
2022
05:06
திருவேற்காடு, :சென்னை திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவில் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, நேற்று காலை பாலாலயம் நடந்தது. இதை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவங்கி வைத்தார்.பின், அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: ஆகம விதிப்படி, 12 ஆண்டுக்கு ஒரு முறை, கும்பாபிஷேகம் நடக்க வேண்டும். கடந்த, 2006ம்ஆண்டு, இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு,2018ம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பாதிப்பால் நடைபெறவில்லை.இன்று பாலாலயம் சிறப்பாக நடை பெற்றது. இந்த கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி, கோவில் பிரகாரத்தை விரிவாக்கம் செய்வது, கோவில் மண்டபம், ராஜகோபுரம் ஆகியவற்றை கருங்கல்லால் புனரமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு, 18 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பணிகள் முடிய, 2 ஆண்டுகளாகும். அதன் பின் திருக்குட முழுக்கு விழா நடைபெறும்.