கயிலாயத்தில் சிவபெருமான், தனக்கு வாகனம் இருப்பது போல் முருகனுக்கும் வாகனம் இருக்க வேண்டும் என விரும்பினார். அதற்காக நாரதர் மூலம் யாகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். தேவர்கள் யாகத்திற்கு வந்தனர். அவர்களுள், ஒருசிலர் அதவாயு என்ற பசுவை யாகத்திற்கு அழைத்து வந்தனர். யாகம் தொடங்கியதும், அந்த பசு சத்தமிட்டது. அந்த பசுவின் வயிற்றில் இருந்து ஆடு தோன்றியது. நேரம் செல்லச் செல்ல அதன் உருவம் பெரிதானது. யாரும் அதன் அருகே நெருங்க முடியவில்லை. அதைக் கண்டு தேவர்கள் ஓடினர். தேவலோக காவல் யானைகளையும் அது விரட்டி விட்டு, வைகுண்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்தது.
இந்தச்செய்தி முருகப்பெருமானுக்கு எட்டியது. அவரது தளபதிகளில் ஒருவரான வீரபாகுவை அனுப்பினார். அவரைக் கண்டதும் ஆடு பின் வாங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் வீரபாகு ஆட்டினை இழுத்து வந்தார். முருகப்பெருமானை பார்த்ததும் ஆடு அவரது பாதத்தில் சரணடைந்தது. தவறு செய்தவர் யாராக இருந்தாலும் முருகப்பெருமானிடம் பணிந்து விட்டால், கருணையுடன் அவர் மன்னித்து விடுவார். ஆட்டையும் தன் வாகனமாக்கினார். முருகப்பெருமான்.