பதிவு செய்த நாள்
09
ஆக
2012
10:08
ஈரோடு: ஈரோடு பெரியார் நகர், பொய்யேரிக்கரை கருப்பணசாமி கோவில் பொங்கல் விழா நேற்று நடந்தது.ஈரோடு பெரியார் நகர், பொய்யோரிக்கரை கருப்பண ஸ்வாமி கோவிலில், கடந்த 7ம் தேதி, தீர்த்தம் எடுத்து வருதலுடன், பொங்கல் விழா துவங்கியது. நேற்று பொங்கல் விழாவையொட்டி, அதிகாலையில், விநாயகர், ஏரிக்கருப்பராயன், கருப்பண ஸ்வாமி, முனியப்பன், கண்ணிமார், நாகதேவதைகள், புற்றுமாரியம்மன், பொய்யேரிமலை வேலாயுத ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது.காலை 9 மணிக்கு பொங்கல் வைத்தல் நடந்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து, கருப்பண ஸ்வாமிக்கு படைத்தனர். காலை 10 மணிக்கு, சக்தி விநாயகர், பஞ்சமுக விநாயகருக்கும், 11 மணிக்கு, கன்னிமார், ஏரிக் கருப்பராயனுக்கும் அபிஷேகம் நடந்தது. மதியம், 12 மணிக்கு பொங்கல் உச்சி பூஜை, மகாமுனி பூஜையும் நடந்தது. மாலை, 6 மணிக்கு ஏரிக்கருப்பராயன் உற்சவர் திருவீதி உலா நடந்தது. இதில், சிதம்பரம் காலனி, பெரியார்நகர், ராஜாக்காடு, நல்லப்பவீதி, கருப்பண்ண வீதியை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மதியம், 12 மணிக்கு, மறுபூஜையோடு விழா நிறைவடைகிறது. தக்கார் சுப்பிரமணின், செயல் அலுவலர் சுகுமார் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.