நரசிங்க பெருமாள் கோயிலில் மீண்டும் புதிய தேர் செய்யும் பணி துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2012 10:08
ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில், புதிய தேர் செய்யும் பணி மீண்டும் துவங்கியது.கோயிலுக்கு தேர் செய்ய, இந்து அறநிலையத்துறை சார்பில், 17 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2006ல் புதிய தேர் செய்வதற்கான பணிகள் துவங்கி சில மாதங்களில் நிறுத்தப்பட்டது. பழைய தேரைக் கொண்டு கடந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் தேரோட்டம் நடந்தது. தேரின் அச்சு முறிந்ததால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. புதிய தேர் செய்யும் பணியை தொடர பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தற்போது 30 அடி உயரத்தில் 236 பதுமைகளுடன், ஐந்து அடுக்குகளைக்கொண்ட புதிய தேர் செய்யும் பணி நடக்கிறது. தேர் செய்துவரும் சிற்பிகளின் குழுத் தலைவர் ஆறுமுகம் கூறியதாவது: ஐந்து அடுக்குகள் கொண்ட தேரில் தற்போது முதல் அடுக்கான பிரம்மா அடுக்கு முடிந்துள்ளது. இந்த அடுக்கில் சிவன்-திருமால் வாழ்வியல் சிற்பங்களும், இரண்டாம் அடுக்கில் திருமாலின் அவதார காட்சி சிற்பங்களும், மூன்றாம் அடுக்கில் திருமால் சிற்பம், நான்காம் அடுக்கில் நாயன்மார்கள் சிற்பங்களும், ஐந்தாம் அடுக்கில் தசாவதாரக்காட்சிகளும் சிற்பங்களாக செதுக்கப்படும். ஐந்து அடுக்குகளுக்கு மேல் அலங்கார கால் நிறுத்தப்பட்டு, அதன்மேல் வேலைப்பாடுகள் செதுக்கப்படும். 30 டன் எடை கொண்ட தேருக்கு தேவையான இரும்பு சக்கரம், திருச்சி பெல் நிறுவனத்தில் தயாராகி வருகிறது. புதிய தேர் செய்யும் பணிகளை இன்னும் மூன்று மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.