பதிவு செய்த நாள்
01
ஜூலை
2022
11:07
செந்துறை: நத்தம் அருகே தொண்டபுரி ராஜ விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி ஜூன் 29 விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. பின் அழகர் கோவில், காவிரி, வைகை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித தீர்த்தங்கள் மேளதாளம் முழங்க கடம் அழைத்து வருதல் நடந்தது. ராஜ விநாயகர், மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை திருகுடத்திற்குள் எழுந்தருளச் செய்தல் மற்றும் இரண்டு கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை தெய்வங்களுக்கு உயிர் ஊட்டுதல், மூலிகை வேள்வி உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் ஆரவாரத்துடன் கடம் புறப்பட்டு கோவிலுக்கு சுற்றி வந்து திருத்தங்கள் கும்பத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புனித நீர் ஊற்றி கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், குடகிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி அழகர்சாமி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தொண்டபுரி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.