பதிவு செய்த நாள்
10
ஆக
2012
10:08
திருத்தணி: முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழாவையொட்டி, நேற்று பரணி விழாவில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், மலைக்கோவிலுக்குச் சென்று மூலவரை வழிபட்டனர்.திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை திருவிழா, நேற்று முன்தினம், ஆடி அஸ்வினியுடன் துவங்கியது. நேற்று, ஆடி பரணியையொட்டி, தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து பக்தர்கள், கார்,வேன், லாரி, பஸ் மற்றும் ரயில்கள் மூலம், நேற்று முன்தினம் இரவே திருத்தணிக்கு வந்தனர். மலர், மயில், பால் மற்றும் அன்னக் காவடிகள் எடுத்து, சிலம்பாட்டத்துடன் பக்தி பாடல்களை பாடியவாறு, மலையடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை மற்றும் நல்லாங்குளத்திற்கு வந்தனர்.சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை அடித்து, உடல் முழுவதும் அலகு குத்தி, மலை கோவிலுக்குச் சென்று ஒரு முறை சுற்றி வந்து, தங்களது நேர்த்திக் கடனை தீர்த்தனர். பக்தர்கள் மூலவரை தரிசிக்க பொதுவழியில், 10 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பச்சை மரகத கல்: விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்க மரகதகல், தங்க கீரிடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. அதேபோல், உற்சவ பெருமானுக்கு காவடி மண்டபத்திலும், ஆறுமுக சுவாமி, ஆபத்சாகய வினாயகர் மற்றும் வள்ளி, தெய்வானை சன்னிதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.நேற்று முன்தினம் முதல், நேற்று நள்ளிரவு வரை, ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் வந்து, முருகப்பெருமானை தரிசித்தனர். பக்தர்கள் வசதிக்காக தேவஸ்தான குடில்களில் இருந்து, இரண்டு பஸ்கள் மலைக் கோவிலுக்கு விடப்பட்டன. மாவட்ட எஸ்.பி., ரூபேஸ்குமார் தலைமையில், 1,250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் (பொறுப்பு) கவிதா, கோவில் தக்கர் ஜெயசங்கர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
கட்டண தரிசனத்திலும் கூட்டம்: பக்தர்கள் விரைவு தரிசனம் செய்வதற்கு, 100, 50, 25 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், மலைக் கோவில் வளாகத்தில் விற்கப்பட்டன. 100 ரூபாய் டிக்கெட் பெற்றவர்கள் இரண்டரை மணி நேரம் காத்திருந்தும், 50 மற்றும் 25 ரூபாய் டிக்கெட் பெற்றவர்கள் குறைந்த பட்சம், நான்கு மணி நேரம் வரிசையில் காத்திருந்தும், மூலவர் முருகப்பெருமானை தரிசித்தனர்.