பதிவு செய்த நாள்
07
ஜூலை
2022
03:07
பெரியபட்டினம்: பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவில் 121 ஆம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு, கந்தூரி விழா நடக்கிறது. நேற்று மாலை 5 மணி அளவில் பெரியபட்டினம் ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சந்தனக்குடம் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
நாட்டிய குதிரைகள் முன்னே செல்ல, மேளதாளங்கள் முழங்க, தர்காவை மூன்று முறை வலம் வந்தனர். மாலை 6 மணியளவில் நூறு அடி உயரம் கொண்ட மினாராவில் பெரியபட்டினம் ஜமாத் தலைவர் முகமது மீராசா கொடியேற்றி வைத்தார். உலக நன்மைக்காக மவுலிது (புகழ் மாலை) ஓதப்பட்டது. அப்போது மலர்களை தூவினர். தர்காவில் உள்ள புனித மக்பராவில் அலங்கரிக்கப்பட்ட பச்சை போர்வை போர்த்தப்பட்டு மல்லிகை சரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஜூலை 16 இரவு சந்தனக்கூடு விழாவும் மறுநாள் அதிகாலை சந்தனக்கூடு ஊர்வலமும் நடக்க உள்ளது. இதன் தொடர்ச்சியாக பகல்கூடு மாலையிலும் நடக்கிறது. ஜூலை 27ல் கொடி இறக்கத்துடன் சந்தனக்கூடு விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை தலைவர் ஹாஜா நஜிபுதீன், துணைத்தலைவர்கள் சிராஜுதீன், சாகுல் ஹமீது, செய்யது இப்ராம்ஷா, ஹபீபு, விழா அமைப்பாளர் அப்துல் மஜீத், துணைச் செயலாளர் கே. சாகுல் ஹமீது, சீனி முஸ்தபா, லாசர், களஞ்சியம், பொருளாளர் சகுபர் சாதிக், அஸ்கர் அலி, ஜாகிர் உசேன் உள்ளிட்ட விழா ஆலோசர்கள், சந்தனக்கூடு விழா கமிட்டியாளர்கள், சுல்தானியா சங்கம், இஸ்லாமிய நண்பர்கள் குழுவினர், தர்கா கமிட்டியினர் செய்திருந்தனர். சந்தனக்கூடு விழா கொடியேற்றத்தை காண்பதற்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பங்கேற்றனர்.