பதிவு செய்த நாள்
09
ஜூலை
2022
04:07
பல்லடம்: பல்லடம் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல் தொட்டி ஒன்று வேட்பாளர்ற்று கிடைக்கிறது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த புளியம்பட்டி கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல் தொட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வரலாற்று ஆர்வலர் மகிழ்வேல் பாண்டியன் கூறுகையில், பல்லடம் வட்டாரத்தில், பழமையான கல்வெட்டுகள், சிலைகள், சின்னங்கள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து வருகிறோம். புளியம்பட்டி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, பழமையான கல்தொட்டி ஒன்று கண்டறியப்பட்டது. அரை அடி ஆழத்துடன், 7 அடி நீளம், மற்றும் மூன்றடி அகலம் கொண்ட இத்தொட்டி, மிகவும் பழமை வாய்ந்தது. ஏரத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், நம் முன்னோர்கள் இறந்தவர் சடலங்களை வைத்து சடங்குகள் செய்ய இத்தொட்டியை பயன்படுத்தியதாக வரலாறு கூறுகின்றது. இதற்கேற்ப, சடலங்களை வைப்பதற்கு வசதியாக, தொட்டியின் தலை பகுதி உயரமாகவும், கீழ் பகுதி பள்ளமாகவும் உள்ளது. கால்நடை தொட்டியாக இருந்தால் மூன்று அடிக்கு மேல் ஆழம் இருக்கும். எனவே, இது சடலங்களை வைக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. இத்தொட்டியில் சடலங்களை வைத்து சடங்குகள் செய்வதால், இறந்தவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்ற ஐதீகம் இருந்ததை வரலாறு கூறுகிறது. இதேபோல், இன்னொரு கல் தொட்டி நெகமம் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ளது. ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய இக்கல் தொட்டியை பாதுகாக்க வேண்டியது அவசியம். ஆனால், கேட்பாரற்று கிடப்பது கவலை அளிக்கிறது என்றார்.