பதிவு செய்த நாள்
09
ஜூலை
2022
04:07
காஞ்சிபுரம்: கொரோனா ஊரடங்கால், இரண்டு ஆண்டுகளுக்குப்பின் நடைபெற உள்ள ஆடித் திருவிழாவையொட்டி, காஞ்சியில் உள்ள அம்மன் கோவில்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன.
ஊரடங்கு : ஆடி மாதம், அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுகிழமைகளில் அம்மன் கோவில்களில் ஆடித் திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.கடந்த இரு ஆண்டு களாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால், காஞ்சியில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடித் திருவிழா விமரிசையாக நடைபெறவில்லை. அரசு வழிகாட்டி நெறிமுறைகளுடன் எளிமையாக விழா நடந்தது.இந்நிலையில், இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் காஞ்சிபுரத்தில் உள்ள ரயில்வே சாலை பரஞ்சோதியம்மன், பிள்ளையார்பாளையம் புதுப்பாளையம் தென்கோடி கருக்கினில் அமர்ந்தவள் அம்மன், சந்தவெளி அம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் நடப்பாண்டு ஆடித் திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது.
புனரமைப்பு பணி: வரும் 17ல் ஆடி மாதம் பிறக்கிறது, இதையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழாவிற்கான ஆயத்தப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இதில், கோவிலின் வளாகம் சுத்தப்படுத்துதல், சுற்றுச்சுவர் மற்றும் கோபுரங்களுக்கு வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் நடந்து வருவதால், ஆடித்திருவிழாவையொட்டி, காஞ்சியில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன.