பதிவு செய்த நாள்
19
ஜூலை
2022
03:07
ஊத்துக்கோட்டை--நம் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, எல்லாபுரம் ஒன்றிய நிர்வாகம் பவானியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குடிநீர் வசதிக்காக, 20 இடங்களில் தற்காலிக தண்ணீர் தொட்டி அமைத்து வருகிறது.பெரியபாளையம், பவானியம்மன் கோவிலில், ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜை நடைபெறும்.இவ்விழாவிற்கு தமிழகம், ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வருவர்.நேற்று முன்தினம் ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணகான பக்தர்கள் குவிந்தனர்.அதிகளவு மக்கள் குவிந்ததால், குடிநீர், கழிப்பறை வசதிகள் போதுமானதாக இல்லை. பிளீச்சிங் பவுடர் தெளிக்கவில்லை. சாலையோரம் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்தான செய்தி வெளியானதையடுத்து, பவானியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, ஆத்துப்பாக்கம், ராள்ளபாடி, வடமதுரை கூட்டுச்சாலை ஆகிய இட்ஙகளில் உள்ள தற்காலிக பஸ் நிறுத்தம் உள்ளிட்ட, 20 இடங்களில் தற்காலிக தண்ணீர் தொட்டி அமைத்து வருகிறது.தற்போது இயங்கும் கழிப்பறை இன்றி, மேலும், ஒன்பது இடங்களில் தற்காலிக கழிப்பறை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சாலையோரம் உள்ள கடைகளுக்கு கயிறு கட்டப்பட்டு உள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வருகை அதிகரிப்பால், அந்த கயிற்றை தாண்டி வந்து வியாபாரம் செய்யக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.சாலைகளில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்படும். இனி வரும் நாட்களில் பக்தர்களுக்கு எவ்வித குறைபாடும் இன்றி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என, ஒன்றிய ஆணையர் சாந்தி தெரிவித்தார்.