பதிவு செய்த நாள்
20
ஜூலை
2022
10:07
மதுரை : திருச்செந்துார் கோவில் தரிசனம் மற்றும் திரிசுதந்திரர்களை முறைப்படுத்தும் வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளையின் கூடுதல் நீதிபதிகள் அமர்வு நேற்று விசாரித்தது.திருச்செந்துார் ஜெயந்திநாதர் திரிசுதந்திரர்கள் காரியஸ்தர் ஸ்தானிகர் சபா செயலர் நாராயணன் என்பவர், சில மாதங்களுக்கு முன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:
திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகத்தை சீரமைக்க, சில வழிமுறைகளை தமிழக அறநிலையத்துறை கமிஷனர் ஏப்.,1ல் உத்தரவாக பிறப்பித்தார்.அதில், தரிசன வரிசைகளை முறைப்படுத்த இலவச தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் மட்டும் செயல்படுத்தப்படும்.திரிசுதந்திரர்களை முறைப்படுத்த, அவர்கள் முறையாக விண்ணப்பித்து, பெயரை கோவில் நிர்வாகத்திடம் பதிவு செய்ய வேண்டும்.குற்ற வழக்கு நிலுவையில் இல்லை என்பதற்கு காவல் துறை சான்று சமர்ப்பிக்க வேண்டும்; கோவிலுக்குச் சொந்தமான சொத்தில் இல்லை என்பதற்கான சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.கோவிலில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ள மாட்டேன் என உறுதிமொழியையும் அளிக்க வேண்டும் என்பன போன்ற உத்தரவுகளை கமிஷனர் பிறப்பித்துள்ளார்.
இது, திரிசுதந்திரர்களின் உரிமையை பறிக்கிறது.அந்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் கோரியிருந்தார்.நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஆர்.விஜயகுமார் அமர்வு அதை அப்போது விசாரித்து, பிறப்பித்த உத்தரவில் கூறியிருந்ததாவது: இந்த வழக்கில், சட்டப்பூர்வமாக பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இதை பரிசீலிக்க, கூடுதல் நீதிபதிகள் அமர்வு அமைக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம்.இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டிருந்தனர்.இதையடுத்து, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.நிர்மல்குமார் அமர்வு நேற்று விசாரித்தது. வழக்கின் விசாரணையை, நீதிபதிகள் இன்றுக்கு ஒத்திவைத்தனர்.