பதிவு செய்த நாள்
21
ஜூலை
2022
03:07
கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் அம்பாள் பிரதிஷ்டை தினத்தையொட்டி 252 பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
கோவில்பட்டியில் ஹரிஹரன் அய்யப்ப பக்தர்கள் சேவாசங்கம், அம்பாள் சுவாமி பாலாபிஷேககுழு சார்பில், செண்பகவல்லி அம்மன் கோயிலில் அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டரேவதி நட்சத்திரமான நேற்று, 6ம்ஆண்டு பாலாபிஷேக விழா நடந்தது.
இதைமுன்னிட்டு, விரதமிருந்த பக்தர்கள், காலை 9 மணிக்கு செண்பகவல்லி அம்மன் கோயிலில் இருந்து பால்குடங்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம், எட்டயபுரம் சாலை, மாதாங்கோயில் தெரு, தெற்கு ரதவீதி, மெயின் ரோடு, தெற்கு பஜார் வழியாக கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து, கோயிலில் செண்பகவல்லி அம்பாள், பூவனநாதசுவாமிக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதையடுத்து, மழைபெய்ய வேண்டியும், தொழில், வியாபாரம், கல்வி, விவசாயம் செழிக்கவும், பொதுமக்கள் நலம்பெறவும் சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். மதியம்பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு செண்பகவல்லி அம்பாளுக்கு ராஜ ராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு, அம்பாள் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏற்பாடுகளை ஹரிஹரன் அய்யப்ப பக்தர்கள் சேவாசங்கம், அம்பாள் சுவாமி பாலாபிஷேக குழுவினர் செய்திருந்தனர்.