பதிவு செய்த நாள்
23
ஜூலை
2022
10:07
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில், ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, இன்று (23ம் தேதி) காலை, 7 மணிக்கு, கொடியேற்றம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஆதினத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி சமேத ஐயாரப்பர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப்புர விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ஆடிபுற விழாவிற்கான கொடியேற்றம் இன்று காலை வெகு சிறப்பாக நடந்தது. கொடி மரத்திற்கு முன்பாக, அலங்காரத்தில் சுவாமி அம்மாள் எழுந்தருளிய நிலையில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, தினமும், ஸ்வாமி புறப்பாடு நடக்கவுள்ளது. வரும், 28ம் தேதி, ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பட்டு, புஷ்பமண்டப காவிரி ஆற்று படித்துறையில், தீர்த்தவாரி நடக்கிறது. அன்றிரவு, கோவில் தென்கயிலாயத்தில், அப்பர் சுவாமி கயிலைக்காட்சி நடக்கிறது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அப்பர் பெருமானை தரிசித்துச் செல்வர். வரும், 31ம் தேதி ஆடிப்பூர தேரோட்டம் நடக்கிறது. மறுநாள், (1ம் தேதி) கொடி இறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, தருமபுர ஆதீனம் கட்டளை விசாரணை முனைவர் குமாரசுவாமி தம்பிரான் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். விழாவை முன்னிட்டு, தினந்தோறும் அம்மன் கோவில் கொலு மண்டபத்தில், சொற்பொழிவும், இசை நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது.