பதிவு செய்த நாள்
28
ஜூலை
2022
11:07
கம்பம்: சுருளி அருவியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம், திருபுவனம், கொடுமுடி, சுருளி அருவி ஆகிய ஊர்கள் பிரசித்தி பெற்றதாகும். சுருளி அருவியில் இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் கூட்டம் வரத் துவங்கியது, ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் அருவியில் குளித்து விட்டு, ஆற்றங்கரையோரம் அமர்ந்திருந்த புரோகிதர்களிடம் தங்களின் முன்னோர்களின் பெயர்களை கூறி தர்ப்பணம் செய்தனர். எள்ளும் தண்ணீரும் சுருளியாற்றில் கரைத்தனர். தர்ப்பணம் கொடுத்த பின்னர் இங்குள்ள பூதநாராயணர் கோயில், சுருளி வேலப்பர் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில்களில் தீபமேற்றி வழிபட்டனர், ஆதி அண்ணாமலையார் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை சிவனடியார் முருகன் சுவாமிகள் செய்தார். முன்னதாக ஆதி அண்ணாமலையார் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்தாண்டு அருவியில் குளிப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் விழுந்தது பொதுமக்கள் மத்தியில் திருப்தியை ஏற்படுத்தியது.
போக்குவரத்து நெரிசல் :, நூற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும், சிறப்பு பஸ்கள் இயங்கப்பட்டதால், அருவிக்குள் நுழைய முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் முன்னெச்சரிக்கையாக பழைய பாளையம் ரோட்டில் வாகனங்களை திருப்பிவிட்டபோதும், நெருக்கடியை தவிர்க்க முடியவில்லை.