பதிவு செய்த நாள்
28
ஜூலை
2022
11:07
நொய்டா :வட மாநிலங்களில் மிகவும் புகழ் பெற்ற, கன்வர் யாத்திரையில் உத்தர பிரதேச போலீசார் பக்தர்கள் போல் வேடமிட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வட மாநிலங்களில் உள்ள சிவபக்தர்கள் சிராவண மாதத்தில், உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார், கோமுக் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கங்கை நதியில் இருந்து புனித நீரை சேகரிக்க, கன்வர் யாத்திரை மேற்கொள்கின்றனர்.அவர்கள் பாதயாத்திரையாக சென்று கங்கை நீரை சேமித்து, தங்களுடைய ஊரில் உள்ள கோவில்களில் வழிபாடு செய்வர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவலால், இந்த யாத்திரை பெரிய அளவில் நடக்கவில்லை. அதனால், இந்த முறை கூட்டம் அதிகமாக உள்ளது. உத்தரகண்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு, முசாபர்நகர் வழியாகவே பக்தர்கள் பயணம் செய்வர். இதையடுத்து, இம்மாவட்டத்தில் 50 கி.மீ., துாரத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள், டிரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் வாயிலாக கன்வர் யாத்திரை கண்காணிக்கப்படுகிறது. முசாபர்நகர் மாவட்ட போலீசார், பக்தர்கள் போல் உடையணிந்து, பாதயாத்திரையில் பங்கேற்று கண்காணித்து வருகின்றனர். சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தவிர்க்கவும், தாக்குதல்களை தடுக்கவும் இந்த முறையை கையாள்வதாக மாவட்ட போலீசார் கூறியுள்ளனர்.