பதிவு செய்த நாள்
03
ஆக
2022
09:08
சென்னை: சிருங்கேரி சாரதா பீடத்தின், 37வது பீடாதிபதி விதுசேகரபாரதி சன்னிதானத்தின் ஜெயந்தி விழா, ஐந்து நாட்கள் ‘வர்தந்தி’ விழாவாக கொண்டாடப்பட்டது. ஆதி சங்கரர் தோற்றுவித்த நான்கு ஆம்னாய பீடங்களில் முதன்மையானதாக சிருங்கேரி சாரதா பீடம் விளங்குகிறது. இப்பீடத்தின், 37 வது பீடாதிபதி ஜகத்குரு சங்கராசார்ய விதுசேகர பாரதி சன்னிதானம். இவர், 1993ம் ஆண்டு திருப்பதியில், வேத பண்டிதர் குப்பா சிவசுப்பிரமணி– சீதா நாகலட்சுமி தம்பதியருக்கு மகனாக பிறந்தவர்.
கடந்த , 2015ல் தன் 23ம் வயதில் சன்யாசம் பெற்றார். சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு சங்கராசார்யார் பாரதி தீர்த்த மஹா சுவாமிகளிடம், சாஸ்திரங்களைக் கற்றுத்தேர்ந்து, இந்தியா முழுதும் விஜயயாத்திரை செய்து, தர்மநெறியை போதித்து வருகிறார். அவரின், 30வது ஜெயந்தி விழா, சிருங்கேரியில், பூஜைகள், ஹோமங்களுடன், ஐந்துநாள் வர்தந்தி விழாவாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, ஜூலை 29ல், சகஸ்ர மோத க மஹாகணபதி ஹோமம், மஹா ருத்ரயாகம், ஸங்கல்பம் செய்யப்பட்டது. இதில், 30க்கும் மே ற்பட்டவேத விற்பன்னர்கள் பங்கேற்று, நான்கு நாட்களில், 1331 முறை ருத்ரபாராயணம் செய்தனர். யாகத்தின் இறுதி நாள் பூர்ணாஹுதி, வஸ்திரதானம் நடந்து, மஹா ருத்ர மஹாயாகத்துடன் நிறைவுற்றது. கடந்த ஜூலை 31ல் கால பைரவருக்கு 108
கலாச அபிஷேகத்துடன் விசேஷ பூஜையையும், ஆக., 1ல் விசேஷ சோம வார சந்திரமவுளீஸ்வர பூஜையும் நடத்தப்பட்டது. நிறைவு நாள் விழாவில், குருசேவையில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள 13 சிஷ்யர்களுக்கு, பாரதி தீர்த்த புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. விஷ்ணு சஹஸ்ரநாமத்தை விளக்கும் ஸ்ரீமந்நாராயணநீயம் என்ற நுாலும், ஸ்ரீ கால பைரவர் சஹஸ்ர நாம ஸ்தோத்திரத்தைக் கொண்ட ஒலித் தட்டும் வெளியிடப்பட்டது. பின், சிருங்கேரி மஹா சுவாமிகள் அருளாசி வழங்கியதாவது: நம் தேசத்தில் கர்ம, பக்தி, ஞான மார்க்கங்களில், ஹிந்து மதம் உயர்ந்து இருப்பதற்கு ஆதி சங்கரரின் அவதாரமே காரணம். அவர், பெரும்பாலான நுால்களின் வாயிலாக, பல்வேறு உபதேசங்களை போதித்து, மக்கள் நிம்மதியாகவும், சுபிட்சமாகவும் வாழ வழி காட்டியுள்ளார். அவர் காட்டிய வழியில் சென்றால் , நமக் கு நிச்சயம் நல்வாழ்க்கை அமையும். இவ்வாறு அருளாசி வழங்கினார். விழாவில், மடத்தின் செயல்பாடுகள், செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து, மடத்தின் முதன்மை அதிகாரி கவுரிசங்கர் விளக்கினார். இதில், வெளிநாடு மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.