பதிவு செய்த நாள்
05
ஆக
2022
08:08
ஆவணி மாத பவுர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிகள் மேற்கொள்வது வரலட்சுமி விரதம். இந்நாளில் பூஜையறையில் மாக்கோலமிட்டு, மகாலட்சுமியை மலர்களால் அலங்கரித்து வழிபடுவர். நிறைகுடத்தில் தேங்காய், மாவிலை, லட்சுமியின் மஞ்சள் முகம் ஆகியவற்றை வைத்து லட்சுமியை ஆவாஹனம் செய்வர். மணமான பெண்கள் இந்த விரதமிருந்தால் மஞ்சள், குங்குமத்துடன் வாழும் பேறு கிடைக்கும்.
பிடித்த பிரசாதங்கள்: வரலட்சுமிக்குரிய நைவேத்யங்கள் பொங்கல், பாயாசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு, ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழைப்பழம், திராட்சை. இவற்றில் அவரவர் வசதிக்கேற்ப பிரசாதங்களைப் படைக்கலாம்.
மந்திரம் சொல்லி கயிறு கட்டுங்க!: வரலட்சுமி விரத பூஜையின் முடிவில் மூத்த சுமங்கலிகள் மற்ற பெண்களின் வலது கையில் மஞ்சள் கயிறு கட்டி விட வேண்டும். கட்டும் போது, நவ தந்து ஸமாயுக்தம் நவக்ரந்தி சமன்விதம்பத்றீயாம் தட்சிணே ஹஸ்தே தோரகம் ஹரிவல்லபே என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.இதை சொல்ல முடியாதவர்கள், நாராயணரின் மனைவியான மகாலட்சுமியே! ஒன்பது இழைகளும், ஒன்பது முடிச்சும் கொண்ட இந்த மஞ்சள் கயிற்றினை பிரசாதமாக ஏற்று வலது கையில் கட்டிக் கொள்கிறேன். எனக்கு நீ அருள்புரிய வேண்டும் என்று சொல்லி வழிபட வேண்டும்.
இழந்த செல்வம் கிடைத்தது: சவுராஷ்டிர தேசத்தின் மகாராணியான சுசந்திராவிடம் ஏராளமான செல்வம் இருந்தது. செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை விட தானே பெரியவள் என செருக்குடன் செயல்பட்டாள். அதை போக்க எண்ணிய மகாலட்சுமி அவளை ஏழையாக்கினாள். சுசந்திராவின் மகளான சாருமதி தன் தாயின் நிலை கண்டு வருந்தி வரலட்சுமி விரதத்தை மேற்கொண்டாள். சுசந்திராவும் அதில் பங்கேற்றாள். கருணைக்கடலான மகாலட்சுமி மனம் இரங்கி இழந்ததை மீண்டும் வழங்கினாள்.
மாதுளைக்குள் மகாலட்சுமி: பெருமாள் பக்தரான மன்னர் பத்மாட்சன் தவத்தில் ஈடுபட்டார். காட்சியளித்த பெருமாள் விரும்பிய வரத்தை தருவதாக கூறினார். மகாலட்சுமியே என் மகளாக பிறக்க வேண்டும் எனக் கேட்டார் மன்னர். பத்மாட்சனிடம் ஒரு மாதுளம்பழத்தைக் கொடுத்த பெருமாள், உன் விருப்பம் விரைவில் நிறைவேறும் என அருள்புரிந்தார். அந்த பழம் பெரிதாக வளர்ந்தது. வியப்படைந்த மன்னர் அதை பிளந்த போது, அதில் ஒருபுறம் மாதுளை முத்துக்களும், மறுபுறம் பேரழகு மிக்க பெண் குழந்தையும் இருப்பதைக் கண்டார். தாமரை மலர் போல சிரித்த முகத்துடன் காட்சியளித்த குழந்தைக்கு பத்மை என பெயரிட்டார். இதனடிப்படையில் மகாலட்சுமிக்கு பிடித்தமான மாதுளையை பிரசாதமாக படைத்து வழிபடுவர்.
நல்லவன் வாழ்வான்: மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் மேருமலைக்கு வந்த போது கிளி முகம் கொண்ட சுகபிரம்ம முனிவர் அவர்களிடம் ஆசி பெற்றார். அப்போது தாயே! மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தால் உன் அருளைப் பெற முடியும்? எனக் கேட்டார் முனிவர். அதற்கு மகாலட்சுமி இனிமையாக பேசுதல், இருப்பதை பிறருக்கு பகிர்ந்து கொடுத்தல், சாந்தமுடன் பழகுதல், பணிவுடன் நடத்தல், பெண்களை மதித்தல், நல்லவர் உபதேசத்தைக் கேட்டல், மனம், மொழி, மெய்களால் துாய்மையுடன் இருத்தல் ஆகிய பண்புகள் கொண்ட நல்லவர்களிடம் நிரந்தரமாக வாசம் செய்வேன் என்றாள். நல்லவன் வாழ்வான் என்பதற்கு இதை விட வேறு சான்று வேண்டுமா...