திருப்புவனம்: திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல் முன் இந்துக்கள் தீ குழி இறங்கி நேர்த்திகடன் செலுத்தி வழிபட்டனர்.
மொகரம் பண்டிகையை இஸ்லாமியர்கள் தங்களை வருத்தி கொண்டு கடைபிடிப்பது வழக்கம், முதுவன்திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையன்று இந்துக்கள் தங்களை வருத்தி கொண்டு தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். இதற்காக பள்ளிவாசலில் காப்பு கட்டி ஆண்களும், பெண்களும் ஒரு வாரம் விரதமிருக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் விறகு கட்டைகளை தானமாக வழங்குகின்றனர். பள்ளி வாசல் முன்பாக மெகா சைஸ் குழி வெட்டி அதிகாலையில் கண்மாயில் நீராடிய பின் ஆண்கள் வரிசையாக மூன்று முறை தீகுழி இறங்குகின்றனர். பெண்கள் முக்காடிட்டு அமர்ந்து கொள்ள ஆண்கள் தலை மீது தீ கங்குகளை வாரி இறைக்கின்றனர். இதன் மூலம் பெண்கள் தங்களை நோய் நொடி அண்டாது என்பது நம்பிக்கை. விதைப்பு, திருமணம், தொழில் உள்ளிட்டவற்றிற்கு பள்ளி வாசலில் வந்து அனுமதி கேட்ட பின் தொடங்குகின்றனர். தீகுழி இறங்குபவர்களுக்கு இஸ்லாமியர்கள் திருநீறு பூசி ஆசி வழங்குகின்றனர்.