பதிவு செய்த நாள்
09
ஆக
2022
10:08
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில், பள்ளிப் புரவலர் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று பேசியது: மாணவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று இல்லாமல், இப்படித்தான் வாழ வேண்டும் என்று குறிக்கோளோடு வாழ்ந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம். கல்விநிறுவனங்களில் ஒழுக்கமும் கல்வியும் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகிறது. அனைத்து மூங்கில்களும் புல்லாங்குழல் ஆவதில்லை. ஒருசில மூங்கில்கள்தான் ஆகிறது. நமது பள்ளியில் பயிலும் மாணவர்கள் புல்லாங்குழல் ஆக வேண்டும். மாநில அளவில் வெற்றிபெறும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஆதீனமே ஏற்கும் என்றார். விழாவில், மாவட்ட அளவிலான யோகா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் குருமகா சந்நிதானம் முன்பு யோகாசனங்களை செய்து காட்டினர். தொடர்ந்து, மாணவர் தலைவர், இலக்கியமன்றத் தலைவர், விளையாட்டுக்குழு தலைவர் மற்றும் மாணவ அணித்தலைவர்கள் குருமகா சந்நிதானம் முன்னிலையில் உறுதிமொழி ஏற்று பதவியேற்றனர். நிகழ்ச்சியில், ஆட்சிமன்றக்குழு துணைத் தலைவர்கள் முருகேசன், ஞானசேகரன், செயலாளர் பாஸ்கரன், நிர்வாக செயலாளர் வி.பாஸ்கரன், பொருளாளர் சுப்ரமணியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, ஆட்சிமன்றக்குழு தலைவர் ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் வரவேற்றார். பள்ளி முதல்வர் சரவணன் நன்றி கூறினார்.