பதிவு செய்த நாள்
11
ஆக
2022
05:08
மானாமதுரை: மானாமதுரை பெரியகோட்டை அருகே உள்ள தெக்கூரில் முளைப்பாரி உற்ஸவ திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி மகளிர் கும்மி பாட்டு பாடி ஆடிய மகளிர் மற்றும் சிறுமிகள் முளைப்பாரிகளை ஊர்வலமாக தூக்கி சென்று ஆற்றில் கரைத்தனர்.
மானாமதுரை பெரியகோட்டை அருகே உள்ள தெக்கூரில் உலகுடைய அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வருடம் தோறும் ஆடி மாதம் முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கடந்த 2 வருடங்களாக, கொரோனா தொற்று காரணமாக, திருவிழா நடைபெறாத நிலையில், இந்தாண்டிற்கான திருவிழா கடந்த ஆக.1ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து, ஏராளமான மகளிர் கள் மற்றும் சிறுமிகள் முளைப்பாரிகளை வளர்க்க துவங்கினர்.இதையடுத்து தினந்தோறும் இரவு தெக்கூரில் உள்ள முளைக்கொட்டு திண்ணையில், பாரம்பரிய முறைப்படி ஏராளமான மகளிர்கள் மற்றும் சிறுமிகள் கும்மி பாட்டு பாடி ஆடியபடியும், சிறுவர்கள் சிலம்பாட்டம் ஆடியபடியும் கும்மி கொட்டி அம்மனை வழிபட்டனர். மழை பெய்து, விவசாயம் செழிக்கவும், திருமணமாகதவர்களுக்கு திருமணம் நடைபெறவும், கிராம மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் இத்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து நேற்று மாலை முளைப்பாரிகளை மகளிர்கள் மற்றும் சிறுமிகள் புத்தாடைகள், நகைகள் அணிந்து ஊர்வலமாக தூக்கிக் கொண்டு கைலாசநாதர்-கோமதி அம்மன், உலகுடைய அம்மன் கோயில்களில் முளைப்பாரிகளை இறக்கி வைத்து வழிபாடு செய்த பின்னர் முளைப்பாரிகளை அருகில் உள்ள உப்பாற்றில் சென்று கரைத்தனர்.இந்த விழாவிற்காக வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் இருந்த தெக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊரான தெக்கூருக்கு வந்து முளைப்பாரி விழாவில் கலந்து கொண்டனர்.