அய்யலூர் கோயில் திருவிழாவில் 121 ஆடுகள் வெட்டி மெகா விருந்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2022 12:08
வடமதுரை: அய்யலூர் அருகே ரோட்டுபுதுார் விலங்கு கருப்பணசுவாமி கோயில் உற்ஸவ திருவிழாவில் 121 ஆட்டுக்கிடாக்கள் வெட்டி பொதுமக்களுக்கு பொது அசைவ விருந்து வழங்கப்பட்டது.
நம்மூரில் கருப்பணசுவாமிக்கு பல அவதாரங்கள் உண்டு. அவற்றில் ஒன்றாக அய்யலூர் அடுத்த ரோட்டுபுதுாரில் விலங்கு கருப்பணசுவாமி கோயில் உள்ளது. இப்பகுதிக்கு அருகில் முன்பு பிரசித்தி பெற்ற தாண்டவராயன் கோயில் இருந்தது. கோயில் கரகம் பாலித்தல் உள்ளிட்ட திருவிழா நிகழ்வுகளுக்காக கந்தமநாயக்கனூருக்கு இவ்வழியே மக்கள் சென்றனர். அப்போது இப்பகுதியை கடந்தபோது சிலருக்கு சுவாமி அருள் ஏற்பட்டு தெரிவித்த தகவலை தொடர்ந்து இங்குள்ள விலங்கு கருப்பணசுவாமியை மக்கள் வழிபட துவங்கினர்.
இங்கு கடந்த 25 ஆண்டுகளாக ஆடி மாதத்தில் பல கிராம மக்கள் ஒருங்கிணைந்து உற்ஸவ திருவிழா நடத்தி வருகின்றனர். குழந்தை வரம், தொழில் விருத்தி என பல வேண்டுதல்களை வைத்து நிறைவேறிய பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆட்டு கிடாய்கள், அரிசி மூடைகளை திருவிழாவிற்கு நன்கொடை வழங்குகின்றனர். நேற்றுமுன்தினம் துவங்கிய இந்தாண்டு திருவிழாவிற்காக 121 ஆட்டு கிடாய்கள் நேர்த்திக்கடனுக்காக வழங்கப்பட்டன. இவற்றை நேற்று காலை வெட்டி பொது அசைவ விருந்து வழங்கப்பட்டது. ஆடுகள் வழங்கியவர்களுக்கு தனியாக டப்பாக்களில் சாதம், கறிகுழம்பு பார்சல் செய்து நிர்வாகிகள் மூலம் ஒப்படைத்தனர். விழாவில் சுற்றுப்பகுதியினர் திரளாக பங்கேற்றனர்.