பதிவு செய்த நாள்
14
ஆக
2022
10:08
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன திருமடத்தில் குரு மகா சன்னிதானம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீன திருமடமான சண்முக நிலையத்தில் ஆதீனத்தின் 27ஆவது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரியார் சுவாமிகள் 75 அடி உயரத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அவர் தேசிய மாணவர் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு அருளாசி வழங்கி பேசினார். அப்போது பாரத நாடு கடந்த 75 ஆண்டுகளில் விவசாயம், தொழில், ராணுவ பலத்தில் வியத்தகு முன்னேற்றம் அடைந்துள்ளது. மாணவர்கள் தேசபக்தியையும், தெய்வ பக்தியையும் இரண்டு கண்களாக போற்றி பாதுகாக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் சார்பில் தருமபுரம் ஆதீனம் மட்டுமன்றி ஆதீனத்தின் 25 கல்வி நிலையங்களிலும், அதில் பணியாற்றும் அனைவரின் இல்லங்களிலும் இன்றைய தினம் தேசிய கொடியேற்றப்பட்டு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது என்றார். நிகழ்ச்சியில் ஆதீன கட்டளைகள் சொக்கலிங்கத் தம்பிரான், சிவகுருநாத தம்பிரான், சுப்பிரமணிய தம்பிரான், சட்டநாத தம்பிரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி செயலாளர் செல்வநாயகம் வரவேற்றார். முடிவில் கல்லூரி முதல்வர் சாமிநாதன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர் கார்த்திகேயன், என்.எஸ்.எஸ். அலுவலர் நடராஜன், கல்லூரி அலுவலக பிரதிநிதிகள் சிவராமன், செல்வ முத்துக்குமாரசாமி, கணேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.