சின்னாளபட்டி: நரசிங்கபுரம் கோயில் விழாவில் ஏராளமான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஏ.வெள்ளோடு அருகே நரசிங்கபுரத்தில் மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழாவின் சிறப்பம்சமாக, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா, வளையபட்டி சேர்வை ஆட்டத்துடன் துவங்கி அம்மன் கரகம் பாலித்தல் நடந்தது. அலங்கரித்த அம்மனுக்கு சக்தி தேங்காய் உடைத்தல், சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அம்மன் புறப்பாடு நடந்தது. விசேஷ அபிஷேக, ஆராதனைகளை தொடர்ந்து நேற்று விழாவின் முக்கிய நிகழ்வாக தேங்காய் உடைத்தல் நடந்தது. விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் கோயில் முன்பாக அணிவகுத்து அமர்ந்திருந்தனர். சுப்பிரமணிய குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜை மகா தீபாராதனை நடந்தது. வலையபட்டி பூசாரி பூச்சப்பன், அம்மன் அனுமதி பெறலை தொடர்ந்து கோயிலை வலம் வந்தார். பின், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தல் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். ஏராளமானோர் பொங்கல் வழிபாடு நடத்தினர்.