பதிவு செய்த நாள்
20
ஆக
2022
04:08
சிவபுரம் சைவ மகாசபை அறக்கட்டளை சார்பில், சொர்ணாம்பிகை உடனமர் ஆனந்த சொர்ணேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முளைப்பாரி, தீர்த்த குடம் ஊர்வலம். அவிநாசி சிவபுரம் சைவ மகாசபை அறக்கட்டளை சார்பில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தெற்கு பகுதியில் முதலையுண்ட பாலகனை மீட்ட தாமரை குளக்கரையில் அமைந்துள்ள விநாயகர், சிங்காரவேலன் உள்ளிட்ட ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனமர் ஆனந்த சொர்ணேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகின்றது.
இதனையடுத்து நேற்று கணபதி, மகாலட்சுமி, நவகிரக கலச மூல மந்திர ஹோமம், மகா தீபாரதனை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து 50 மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு மேல் மங்கள இசையுடன் புண்யாஹ வாசனம், மூல மந்திரம் மங்கள திரவியாகுதி, உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து கலசம் புறப்பட்டு சக்தி விநாயகர், சிங்காரவேலன், ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனமர் ஆனந்த சொர்ணேஸ்வரர் ஆலய விமானத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. அதனைத் தொடர்ந்து தசதானம், மகா அபிஷேகம், விசேஷ அலங்கார பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவினை, சிவபுரம் சைவ மகாசபை அறக்கட்டளை சார்பில் சிவனடியார் பிரகதீஸ்வரன் தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.