பதிவு செய்த நாள்
27
ஆக
2022
17:41
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 75 வது சுதந்திர தின நிறைவு விழா, சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு விழா நன்றி நவிலல் கூட்டம் நகர மேல்நிலைப் பள்ளி ராமானுஜம் அரங்கத்தில் நடந்தது. கும்பகோணம் எம்.எல்.ஏ. அன்பழகன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் வேலப்பன், அரசு தன்னாட்சிக் கலைக் கல்லுாரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இதில், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் சிறப்புரையாற்றி பேசுகையில்; சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி உள்ளிட்ட தென்னிந்தியாவின் பகுதிகளில் பல மாதங்கள் தங்கி இருந்த நிலையில் தாயார் காலமாகிவிட்டதாக அவர் கனவு கண்டார். தாயின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்த சுவாமிஜிக்கு இதனால் சிறிது சஞ்சலம் ஏற்பட்டது. கனவில் கண்டது உண்மையா என்பதைக் அறிய சுவாமிஜி கும்பகோணம் அருகில் உள்ள வலங்கைமானுக்குச் சென்றார். அங்கு ஜோசியரான கோவிந்த செட்டியைச் சந்தித்தார். கோவிந்த செட்டி சுவாமிஜிக்கு மூன்று முக்கிய செய்திகளைக் கூறி ஆறுதலும் ஆற்றலும் வழங்கினார். சுவாமிஜியின் தாய் உயிரோடுதான் இருக்கிறார், சுவாமிஜியை அவரது குருவின் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கண்ணெனக் காக்கிறார்,
சுவாமிஜி விரைவில் மேலை நாடுகளில் பாரத பெருமையைப் பறைசாற்றுவார் என கோவிந்த செட்டி கூறிய இந்த மூன்று செய்திகளும் சுவாமிஜிக்குக் கிடைத்தது கும்பகோணம் மண்ணில்தான். உலக மக்கள் அனைவருக்கும் அமைதியையும் ஆற்றலையும் தருபவர் சுவாமி விவேகானந்தர். சுவாமிஜிக்கே அமைதியையும் ஆறுதலையும் தந்தது கும்பகோணப் பெருநகரம்!
அதன் பிறகு சிகாகோவில் உரையாற்றி பாரத தேசத்தின் பெருமையை உலகறிய செய்தபின் சுவாமிஜி 1897ல் தாயகம் திரும்பிய போது கும்பகோணத்தில் பிப்ரவரி 3, 4, 5 தேதிகளில் மூன்று தினங்கள் தங்கி வேதாந்தப் பணி என்ற அருமையான ஓர் உரையினை நிகழ்த்தினார். அந்த உரையில்தான் சுவாமிஜி "எழுந்திருங்கள்; விழித்துக் கொள்ளுங்கள்; லட்சியத்தை அடையும் வரை ஓயாது செல்லுங்கள்" என்று வீர முழக்கமிட்டார். கும்பகோணத்தில் சுவாமிஜி உரையாற்றிய அதே இடத்தில் அவருக்கு ஏழு அடி உயர வெண்கலச் சிலை தற்போது சுதந்திர தினத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான ராமகிருஷ்ண விவேகானந்தர் பக்தர்களுக்குப் பெரு மகிழ்ச்சி தரும் இந்தச் சிலை திறப்பு விழாவை முன்னின்று நடத்திய கும்பகோணம் கிளப் தலைவர் மற்றும் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட அனைவருக்கும் உலகளாவிய ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். சுவாமிஜி சிலை அமைத்ததன் மூலம் கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹால் இளைஞர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டும் களஞ்சியமாக திகழ்திடும் வகையில் பொலிவு பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசபக்தியும் தன்னம்பிக்கையும் இளைஞர் இடத்தில் மிளிரச் செய்யும் வகையில் நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் இவ்வாறு அவர் பேசினார்.
கும்பகோணம் ராமகிருஷ்ணன் விவேகானந்தா டிரஸ்ட் செயலாளர் வெங்கட்ராமன் வரவேற்றார். பள்ளிகள், கல்லுாரிகளின் முதல்வர்கள், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துக்கொண்டனர். அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. விழாவில், சத்யநாராயணன் நன்றி கூறினார்