நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த கும்பாபிஷேகத்தின் போது, ‘தினமலர்’ நாளிதழ் சார்பில் 25 லட்சம் ரூபாய்க்கு தெற்கு ராஜகோபுரம் கட்டிக்கொடுக்கப்பட்டது. பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அழகம்மன் சுந்தரேஸ்வரர் அறக்கட்டளை சார்பில் பவுர்ணமி தேர் வடிவமைக்கப்பட்டது. இதற்கு தேவசம்போர்டு அனுமதி வழங்கிய நிலையில் இதற்கான கும்பாபிஷேக ஏற்பாடுகள் சில நாட்களாக நடந்தன. பவுர்ணமி தேருக்கு கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 8 மணிக்கு கிழக்கு வாசல் முன்பிருந்து பவுர்ணமி தேர் ஊர்வலமாக புறப்பட்டு, வீதி உலா வந்து கோவிலை வந்து அடைந்தது.
நிகழ்ச்சிக்கு கோவில் வழிபாடு அறக்கட்டளை தலைவர் சரண்யா கே நாகராஜன்,செயலாளர் ஸ்ரீனிவாசசங்கர் தலைமை வகித்தனர். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். தேர் ஊர்வலத்தை அமைச்சர் மனோதங்கராஜ் துவக்கி வைத்தார். தேர் ரத வீதிகளில் சுற்றி வந்த போது ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். காலை 11:30 மணிக்கு கோவில் வந்தடைந்த தேருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், துணை மேயர் மேரி பிரின்சி லதா, கவுன்சிலர் அக்சயா கண்ணன், ஸ்ரீனிவாச சங்கர், நாகராஜன், வடிவை மகாதேவன், வக்கீல் சதாசிவன், பாலா, குமார் மற்றும் மாநகராட்சி மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு தினமலர் டி.வி. ராமசுப்பையர் கலையரங்கத்தில் பியூசன் சிங்காரி மேள நிகழ்ச்சி நடந்தது.