பதிவு செய்த நாள்
30
ஆக
2022
11:08
சென்னை : நாகப்பட்டினத்தில் இருந்து, 40 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட, வெண்கல சிலைகள், அமெரிக்காவில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அருகே, பண்ணத்தெரு என்ற இடத்தில், பண்ணாக பரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவில் இருந்து, 40 ஆண்டுகளுக்கு முன், வெண்கல விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடினர். இதுகுறித்து, தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்த விநாயகர் சிலை குறித்த குறிப்புகள், புதுச்சேரியில் உள்ள, கலை பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ளதாக, போலீசாருக்கு தெரியவந்தது. அங்குள்ள புகைப்பட தொகுப்பை ஆய்வு செய்தபோது, பண்ணாக பரமேஸ்வரி கோவிலில் இருந்து, சோமஸ்கந்தர், சந்திரசேகர அம்மன், தேவி, அஸ்திரதேவர், பிடாரி அம்மன், நடன சம்பந்தர், தேவி என, 11 வெண்கல சிலைகள் திருடு போனது தெரியவந்தது. சர்வதேச சிலை கடத்தல்காரர் சுபாஷ் கபூர், 77 என்பவர், இந்த சிலைகளை அமெரிக்காவுக்கு கடத்தியது தெரியவந்தது. இந்த சிலைகள், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஏல நிறுவனம் மற்றும் அருங்காட்சியகத்திற்கு விற்று இருப்பதும் தெரியவந்துள்ளது. சிலைகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.