பதிவு செய்த நாள்
30
ஆக
2022
01:08
அன்னூர்: ஓரைக்கால்பாளையம், ராம வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
ஓரைக்கால்பாளையம், வரதராஜ பெருமாள் கோவில் பழமையானது. கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 26ம் தேதி முதற்கால வேள்வி பூஜை உடன் துவங்கியது. இரண்டாம் காலம் மற்றும் மூன்றாம் கால வேள்வி பூஜை 27ம் தேதி நடந்தது. நான்காம் மற்றும் ஐந்தாம் கால வேள்வி பூஜை, விமான கலசங்கள், கோபுர கலசங்கள் நிறுவுதல் ஆகியவை 28ம் தேதி நடந்தது. நேற்று அதிகாலையில் ஆறாம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை 9:30 மணிக்கு ராஜகோபுரம், சொர்க்கவாசல் கோபுரம், பெருமாள் விமான கோபுரம், சூரியன், ஆஞ்சநேயர் சன்னதி ஆகியவற்றுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து கிருஷ்ண லீலா பிருந்தாவன பஜனை குழு உட்பட பல்வேறு ஊர் பஜனை அன்பர்களின் ஆடல் பாடலுடன், பஜனை காலை 11:00 மணிக்கு துவங்கி, மதியம் 3:00 மணி வரை நடந்தது. மண்டல பூஜை நிறைவடையும் வரை அனைத்து நாட்களிலும் இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை பிருந்தாவனத்துடன் பஜனை நடக்கிறது. கும்பாபிஷேக விழாவில் கணேசபுரம், அன்னூர், அச்சம் பாளையம், உட்பட பல ஊர்களில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.