பதிவு செய்த நாள்
17
ஆக
2012
04:08
இந்திய வரலாற்றில் குப்த மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் வான சாஸ்திரமும் சோதிட சாஸ்திரமும் உச்ச நிலை அடைந்திருந்தது. இதற்குக் காரணம், அப்போது வாழ்ந்திருந்த ஆரிய பட்டர், வராகமிஹிரர், பாஸ்கராசாரியார் போன்ற அறிஞர்களே! மாமேதை ஆரியபட்டரே இந்திய சோதிட சாஸ்திரத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். கணிதத்தில் இவர் சிறந்த வல்லுனர். கணித சூத்திரங்கள் பலவற்றை முதன் முதலாக அவர் வகுத்ததோடு, அவற்றுக்கு விளக்கமும் எழுதிவைத்தார். இன்றும் கூட அவரது சூத்திரங்கள் கணிதத் துறையில் பயன்பட்டு வருகின்றன.
பூஜ்யம்: இப்போது உலகம் எங்கும் தசம முறை வழக்கில் உள்ளது. இந்தத் தசம முறை, பண்டைக் காலத்திலேயே பாரதத்தில் கையாளப்பட்டு வந்த, ஒன்று முதல் ஒன்பது மற்றும் பூஜ்யம் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டதே! பூஜ்யம் முதன் முதலாக நம் நாட்டில் தான் கண்டறியப்பட்டது அதை யார்- எந்தப் பகுதியினர் கண்டறிந்தார்கள் என்று தீர்மானமாகத் தெரியவில்லை. ஆனால் புகழ்பெற்ற வெளிநாட்டு யாத்ரீகர்களான இப்னவேஷியா (ஒன்பதாம் நூற்றாண்டு) அலம் சூதி (பத்தாம் நூற்றாண்டு) அல்பரூனி(பதினோராம் நூற்றாண்டு) ஆகியோர், தாங்கள் எழுதியுள்ள நூல்களில், இந்துக்களே பூஜ்யத்தைக் கண்டறிந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
எண்களுக்குப் பெயர்
ஆரிய பட்டர் தாம் எழுதியுள்ள கணித நூலில் பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், ஒரு லட்சம், ஒரு கோடி, பத்துக் கோடி போன்ற எண்களைக் குறிப்பிட கீழ்க்கண்டவாறு பெயர்களைப் பயன்படுத்தியுள்ளார்.
1-ஏக, 10- தச, 100- சத, 1000-சகஸ்ர, 10,000-அயுத, 100000-பிரயத, 10000000-கோடி, 100000000-அபுர்த, 1000000000-விருத்த. இது தவிர, ஆரிய பட்டர் எழுத்துக் குறி மூலம் எண்களைக் குறிப்பிடும் ஒரு முறையையும் புதிதாக உருவாக்கினார்.
கிரகணம்: சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் ராகு அவற்றை விழுங்குவதால் ஏற்படுவதில்லை. சந்திரனின் மீது பூமியின் நிழல்படுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் குறுக்கிட்டு சூரியனை மறைப்பதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது என ஆரியபட்டர் அக்காலத்திலேயே தமது நூலில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். இதுமட்டுமல்ல; பூமி தன்னைத் தானே சுற்றுவதோடு சூரியனையும் சுற்றி வருகிறது எனக் கணக்கிட்டு கூறிய முதல் இந்தியரும் அவரே.
ஒரு வருடம் என்பது 365. 2586805 நாட்கள் கொண்டது என்று ஆரியபட்டர் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இப்போது உள்ள விஞ்ஞானிகளோ 365.2563604 நாட்கள் கொண்டது ஒரு வருடம் என நவீன சாதனங்களைக் கொண்டு கணித்துக் கூறுகிறார்கள். அவர்கள் கூறும் இந்தக் கணக்கு ஆரியபட்டர் இன்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே, நவீன சாதன வசதிகள் எதுவும் இன்றி கணித்துக் கூறியதற்குக் கிட்டத்தட்ட ஒத்தே உள்ளது.
வட்டத்தின் பரப்பு பை-ஆர்-ஸ்கொயர் என்பது இப்போது ஜியோமிதியில் வழக்கில் உள்ள மிக முக்கியமான சூத்திரங்களுள் ஒன்று. இதை உருவாக்கியவர் ஆரியபட்டர்தான். இவர் கி.பி. 476-ல் பிறந்தவர். தமது இருபத்து மூன்றாவது வயதில் (499-ல்) ஆரிய பட்டீயம் என்ற நூலை இயற்றினார். ஆனால், இவர் எங்கே பிறந்தார், வாழ்ந்தார் என்பது குறித்து வரலாற்றாசிரியர்களால் உறுதிபடக் கூறமுடியவில்லை. அக்காலத்தில் மகத நாட்டின் தலைநகராக விளங்கிய பாடலிபுத்திரத்தில் (தற்போதைய பாட்னா நகர்) பிறந்தவர் என்பர். வேறு சிலரோ. அவர் தமிழ்நாட்டில் பிறந்தவர் என்கின்றனர். திருவனந்தபுரத்தில் ஆரியபட்டீயத்துக்கு நீலகண்டி என்ற ஓர் உரைநூல் அக்காலத்தில் எழுதப்பட்டது ஆரியபட்டர் தென்னாட்டவர் என்பதற்கு ஆதாரமாக இதை சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஆரியபட்டீயம்: ஆரியபட்டரின் ஆரியபட்டீயம் நான்கு காண்டங்களாக (பாகங்களாக) பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பாகமான கீதிகா பாகத்தில் 10 சுலோகங்கள் இதில் எண்களை எழுத்துகள் மூலம் குறிப்பிடும் முறை விளக்கப்பட்டுள்ளது. இரண்டாம் காண்டமான கணித பாகத்தில் 33 சுலோகங்கள். இதில் வர்க்க மூலம், கனமூலம் கண்டுபிடிப்பதற்கான விதிகள் விளக்கப்பட்டுள்ளன, பரப்பளவு, சராசரிகள், வட்டத்தின் சுற்றளவு, வட்டத்தின் பரப்பளவு கண்டுபிடிப்பதற்கான விதிகள் விவரிக்கப்பட்டடுள்ளன. மூன்றாவது காண்டமான கால கிரியா பாதத்தில் சூரிய வருடம், சந்திர மாதம், நட்சத்திர மாதம், அதி மாதம், கிரகணங்களின் தேதி, இடம் கண்டுபிடிப்பதற்கான முறைகள் 25 சுலோகங்களில் கூறப்பட்டுள்ளன. நான்காவது காண்டமான கோளபாதாவில் துருவ வட்டம், அடிவானம் பற்றிய விவரங்கள் 50 சுலோகங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆரியபட்டரே இந்திய வான சாஸ்திரத்தின் தந்தை என்பதாலேயே வானவெளியில் முதன் முதலாக (1975-ஆம் ஆண்டு) ஏவப்பட்ட நம் முதல் செயற்கைக்கோளுக்கு ஆரியபட்டா என்று பெயர் சூட்டியது பாரத அரசு!