பாலக்காடு, செம்பை வித்யா பீடத்தில் நடந்த விழாவை கேரளா கலாமண்டலம் பதிவாளர் ராஜேஷ்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நரேந்திர மேனன் தலைமை வகித்தார். மிருதங்க வித்வான் ராமகிருஷ்ணன் வாழ்த்துரையாற்றினர். செம்பை வித்யா பீடம் தலைவர் சைம்பை சுரேஷ், செயலாளர் கிழத்தூர் முருகன், கோபகுமார், குழல்மன்னம் வட்டார பஞ்சாயத்து தலைவர் தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தொடர்ந்து சுகுமாரி நரேந்திர மேனன் குழுவினரின் இசைக் கச்சேரி நடந்தன. வயலினில் ஜயதேவன் ஒற்றப்பாலம், மிருதங்கத்தில் ஆலுவா கோபாலகிருஷ்ணன், முகர்சங்கில் வெள்ளிநேழி ரமேஷ் ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். இன்று காலை 8.30 மணிக்கு செம்பை வித்யா பீட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சங்கீதா ஆராதனை நடக்கிறது. காலை 11.30 மணிக்கு, செம்பை வித்யா பீடத்தின் 37வது மாநாட்டை கேரளா சட்டசபை சபாநாயகர் ராஜேஷ் துவக்கி வைக்கிறார். எம்.எல்.ஏ., சுமோத் தலைமை வகிக்கிறார். பிரவாசி பாரதிய சம்மான் விருது தகுதி பெற்ற தொழிலதிபர் சித்திக் அஹமது கவுரவிக்கப்படுகிறார். தொடர்ந்து மண்ணூர் ராஜகுமாரன் உண்ணி குழுவினரின், இசைக் கச்சேரி நடக்கிறது.இரு நாட்கள் நடக்கும் சங்கீத உற்சவத்தில் 120க்கும் இளம் இசைக் கலைஞர்கள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.