பதிவு செய்த நாள்
04
செப்
2022
07:09
பெரியபட்டினம்: வண்ணாங்குண்டு கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வையக்குண்ட அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா நடந்தது. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுகளுடன் விழா துவங்கியது.
நேற்று காலை 7 மணி அளவில் பத்திராதரவை கிராமத்தில் இருந்து தயார் செய்யப்பட்ட அய்யனார், கருப்பண்ணசாமி, குதிரை, கணேசர், பைரவர், வீரபத்திரர், தவழும் பிள்ளை உள்ளிட்ட களிமண்ணால் செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்ட உருவங்களை சுமந்து வந்து பள்ளிக்கூடம் அருகே வரிசையாக வைத்தனர். பின்பு காலை 9 மணி அளவில் நேர்த்திக் கடனாக செலுத்தப்படும் பொம்மைகளை வரிசையாக அடுக்கி அவற்றிற்கு தேங்காய் உடைத்து சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட பொம்மைகளை கைகளில் சுமந்தபடி வையக்குண்ட அய்யனார் கோயில் வளாகத்தில் வைத்தனர்.
கிராம மக்கள் கூறியதாவது; உலக நன்மைக்காகவும், விவசாயத்திற்கு முறையாக பருவமழை பெய்ய வேண்டியும் மூன்று வருடத்திற்கு ஒரு முறை குதிரை எடுப்பு விழா நடத்துவது வழக்கமாகும். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தற்பொழுது 5 வருடத்திற்கு பிறகு குதிரை எடுப்பு விழா நடத்தப்படுகிறது. இப் பூஜையில் கலந்து கொண்ட பின்பு மழை பெய்வதாக ஐதீகம் நிலவுகிறது என்றனர். வண்ணாங்குண்டு, புதூர், நேருபுரம், மேதலோடை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர். அய்யனார் கோயில் டிரஸ்டி ரத்தினம், நிர்வாகிகள் டீஸ், வேலுச்சாமி, பூபதி, ஆறுமுகம், ஊராட்சி தலைவர் தியாகராஜன் உள்பட கிராம தலைவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இரவு 10 மணியளவில் சத்திய ஹரிச்சந்திரா நாடகம் நடந்தது.