அசுரகுலத்தில் பிறந்தாலும் பிறவியிலேயே ஹரிபக்தி கொண்டவன் பிரகலாதன். இரண்யனைக் கொன்ற நரசிம்மன், பிரகலாதனுக்கு லட்சுமியை மடியில் தாங்கியபடி லட்சுமி நரசிம்மனாக காட்சி அளித்து, இனிமேல் உன் வம்சத்தில் பிறப்பவர்களை நான் கொல்ல மாட்டேன் என்று வரம் அளித்தார். பிரகலாதனின் பேரனான வைரோசனனின் மகனே பலிச்சக்கரவர்த்தி. மற்ற அவதாரங்களில் உயிர்களைக் கொல்லும் தோஷம் விஷ்ணுவுக்கு ஏற்பட்டாலும், வாமன அவதாரத்தில் யாரையும் அவர் கொல்லவில்லை. தானம் கேட்ட வாமனர், மூன்றாவது அடிக்காக பலியின் தலையில் திருவடியை வைத்து பாதாளலோகத்திற்கு அனுப்பி விட்டார். தாத்தாவுக்காக பேரனின் உயிரைக் கொல்லாமல் அருள்புரிந்தார். வாமன அவதாரத்தில் மட்டும், பகவான் அசுரர்களைக் கொல்லாமல் விட்டதாலும், ஆண்டாள் அவரை உத்தமன் என்று பாராட்டிப் பாடியதாகச் சொல்வர்.