சீர்காழியில் திருமால், உலகளந்த பெருமாள் என்னும் திருநாமத்துடன் திருவடி உயர்த்தி நிற்கும் காட்சியைத் தரிசிக்கலாம். இங்கு திருமங்கையாழ்வார், திருஞானசம்பந்தரின் முன்னிலையில் பாசுரம் பாடியது குறிப்பிடத்தக்கது. அப்பாடலைக் கேட்டு மகிழ்ந்த சம்பந்தர், தன் கையிலிருந்த வேலை ஆழ்வாருக்குப் பரிசாகக் கொடுத்தார். இங்கு பெருமாள் ஒரு காலை உயர்த்தி இருப்பதோடு, ஒரு விரலையும் மேலே உயர்த்தியபடி நிற்கிறார். மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே என்று கேட்பதுபோல இது அமைந்துள்ளது. உன்னிடமுள்ள ஆணவம் என்ற ஒன்றே ஒன்றை மட்டும் விடு. தூக்கிய என் திருவடியை உனது சிரசிலும் வைப்பேன், என்று சொல்வதுபோலும் இருக்கிறது.